வெகு தொலைவில் யாரோ சிவரஞ்சனி இராகத்தில் யாழ் இசைத்தார்கள்

வெகு தொலைவில் யாரோ சிவரஞ்சனி இராகத்தில் யாழ் இசைத்தார்கள் 


அழகான மனைவி வேண்டும் என்று காடு நாடெல்லாம் அலைந்து,கடைசியில் அழகர்குடியில் பெண் எடுத்தேன். தங்கமாய் ஜொலித்தாள், தாரகைகளை பழித்து நின்றாள். ஈச்சம்பழ கண்சிமிட்டி, ஈவிரக்கம் இல்லாமல் என்னை கவர்ந்து நின்றாள். ரோஜாப்பூ இதழ்களிலே தேன் வழிய நின்றாள், ரசகுல்லா மாதிரி தளதளத்து  நின்றாள். உருகிய சொக்கோலேற்றில் தோய்த்த மாஷ்மலோ போல் தித்தித்தாள், உருகிப்போனேன் நான்.

தேன்  உண்ட வண்டாய் நான் மயங்கி நின்றேன், தெம்மாங்கு பாடி அவள் வயமானேன்.
அம்மா சொன்னா "கொஞ்சம் தலைக்கனம் பிடிச்சவள் போலை இருக்கு கவனமடா".
அக்கா சொன்னா "வடிவிருக்கு எண்ட நினைப்பாக்கும், அதெல்லாம் தம்பி சமாளிப்பான், கடிவாளம் சரியா பிடிச்சா குதிரை சொன்னபடி ஓடும்". நானும் ம்ம்! என தலையாட்டினேன்.

 நண்பர்கள் எல்லாரும் "குடுத்து வைச்சவன்டா, வடிவெண்டு பார்க்காமல் குமுறி எடு" என்றார்கள். கலியாணம் முடிந்து, மகுடி கேட்ட நாகமாய், மதி மயங்கி முதல் இரவுக்கு  காத்திருந்தேன்.
பால் செம்புடன் அன்னநடை போட்டு உள்ளே வந்தவள், குயில் குரலில் பேசினாள்.
பஞ்சவர்ண கிளி போல் கொஞ்சும் தமிழ் பேசி என்னை கிறங்க வைத்தாள். "தையலே  நீ வாய் திறந்தால், தாமரை பூ வாசம்" என்றேன்."ஈஸ்வரரே நீர் என்னருகில் வர நான் ஈரமாகி போகிறேன்" என்றாள்.

மூன்றாம் மாசமே நாங்கள் ஆஸ்திரேலியா குடிபெயர்ந்தோம். உடனடியாக எனக்கு வேலையும் கிடைத்து. ஒரு இரு அறைகள் கொண்ட வீட்டில் வாடகைக்கு எடுத்து வாழ்ந்தோம்.  இரண்டாம் மாசம் தொலைபேசி அழைப்புகளுக்கான நிலுவை கட்டண  பத்திரிக்கை வந்தது,
நிலுவையை பார்த்து அதிர்ந்து போனேன். என் மாத சம்பளத்தில் கால்வாசி தொகை.

அழைப்புகளுக்கான பட்டியலை பார்த்தேன். எல்லாமே இலங்கையில் வசிக்கும் அவள் தாயின் தொடர்பிலக்கம். இது  நடந்தது 1987ல். இப்போது மாதிரியில்லை, அப்போது வெளிநாட்டு அழைப்புகளுக்கான கட்டணம் அதிகம். அவளை பார்த்து "என்னதிது உன் அம்மாவுடன் தினமும் தொலைபேசியில் கதைச்சாயா?". "அம்மா பாவம் தனியாக  இருக்கிறா, உங்கடை அம்மா மாதிரியில்லை கூட உங்கடை அப்பா இருப்பார், அதுதான் ...." என நீட்டி முழக்கினாள் என் சிங்காரவல்லி.

"சரி, சரி! நான் மாத துவக்கத்திலை ஒரு நூறு டொலர் தந்தனே அதை கொண்டுவா, என்னிடம் இருப்பதையும் போட்டு இந்த நிலுவையை செலுத்திவிடுகிறேன்" என்றேன். "நூறு டொலரா? என் அழகு சாதன பொருட்கள் வாங்க செலவழித்துவிடடேன்" என்றாள் கூச்சமில்லாமல். "நான் வடிவாயிருந்தால் உங்களுக்கு பெருமைதானே" என கிளுகிளுத்தாள். அவள் அழகில் கிறங்கிபோய் இருந்த எனக்கு அவள் செய்வதெல்லாம் பிழையாக படவில்லை. செலவை சமாளிக்க முடியாமல் போகவே அவளும் ஒரு வேலையில் சேர்ந்ததாள்.

அருகே இருந்த தொடர் சங்கிலி பெரிய கடை ஒன்றில் காசாளராக அமர்ந்தாள். அவள் சம்பளம் அவளின் தொலைபேசி அழைப்புகளுக்கும், அழகு சாதனங்களுக்கும் போதுமானதாக இருந்தது.
பிரச்சினை இல்லாமல் ஆறு மாதம் ஓடியது. சிநேகிதிகள் அதிகமாயினர். ஒவ்வொரு சனியும் வீட்டில் என் சிநேகிதர்கள் குடும்பம், அவள் சிநேகிதிகள் குடும்பம் என விருந்துகள் வைக்க ஆரம்பித்தாள். பிறகு அவர்கள் எங்களை விருந்துகளுக்கு அழைத்தார்கள். அதெற்கெல்லாம் பரிசுப்பொருட்கள் வாங்கிப்போனோம். காசு கரியானது, கணக்கு வழக்கை சரிக்கட்ட முடியவில்லை.

இருவரும் மேலதிக வேலை செய்தோம். ஒருவாறு பணம் சேர்த்து வங்கி கடன் வாங்கி சொந்தமாக நாலு அறைகள் கொண்ட புது வீடு வாங்கினோம்.எங்களுடைய முதலாவது திருமண நாளை நன்பர்கள் உறவினர்கள் எல்லோரையும் அழைத்து, ஒரு மண்டபத்தில் விழாவாக கொண்டாடினோம் என்பதைவிட, கொண்டாடினாள் என்பது பொருந்தும். அம்மா திருமண நினைவு நாளுக்கு வாழ்த்தி கடிதம் போட்டிருந்தா. "என்னடா கலியாணமாகி ஒரு வருஷம் ஆக்கியிட்டுதே, வயித்தில் பூச்சி, புழு உண்டாகி இருக்கா?" என வினாவியிருந்தா.

எனக்கு அப்போதுதான் உறைத்தது. ஏன் ஒரு வருஷமாகியும் எங்களுக்கு  குழந்தை பிறக்கவில்லை.
என் மனம் நிறைந்த அகமுடையாளை கேட்டேன். "ஏன் குழந்தை பிறக்கவில்லை?" நளினமாக சிரித்த என் மனைவி "கருத்தடை மாத்திரை எடுக்கிறேனே, எப்படி குழந்தை உண்டாகும்?" என சாதாரணமாக கேடடாள். அதிர்ந்து போனேன். "என்னது கருத்தடை மாத்திரையா? எனக்கு தெரியாதே.ஏன் இதை என்னிடம் மறைத்தாய்?" என்றேன். "இது பெம்பிளையள் விடயம், மாத விலக்கு வருவதுபோல், அதுதான் சொல்லவில்லை."

"என்ன இழவோ, உதை நிப்பாட்டு, எனக்கு உடனடியாக குழந்தை வேணும்" என்றேன்.
"உடனடியா குழந்தை பெற ஏலாது , பத்து மாசம் பொறுக்க வேணும்" என சிணுங்கினாள். ஆறு மாதங்கள் ஆகியும் குழந்தை உண்டாகவில்லை. மனம் உடைந்து போனேன். அவளாகவே மகப்பேறு வைத்தியரை கலந்தாலோசிக்கலாம் என்றாள். என்னையும் பரிசோதிக்க வேண்டும், ஏனெண்டால் என்னில் ஏதாவது பிழை இருக்கலாம் என்றாள். என்னை  ஆண்மை இல்லாதவன் என்கிறாளா? முதன் முதலாக இராட்ச்சசி மாதிரி தோன்றினாள்.

ஐயையோ! அம்மா சொல் கேளாமல் சூர்பனகையை அல்லவோ தாரமாக்கினேன்.
காசை குடுத்து பேயை கொண்ட கதையாச்சே , என மறுகி நின்றேன். மகப்பேறு வைத்தியர் எங்களுடைய இரத்தம், சிறுநீர் பரிசோதனை அறிக்கைகளை படித்தவர்,
நகைத்து "என்ன நூறு டொலர்களை செலவழித்து என்னுடன் விளையாடுகிறீர்களா" என்றார்.

நான் பயந்து போனேன். என்னில் ஏதாவது பிழை இருக்குமோ, எனக்கு வியர்த்து கொட்டியது.
"உங்களில் பிழை ஒன்றும்  இல்லை, வித்துக்கள் மிக ஆரோக்கியமாக இருக்கின்றன" என்றார்.
"உங்கள் மனைவியிலும் பிழை ஒன்றும் இல்லை, ஆனால் அவர் இரத்தத்தில் கருத்தடை மாத்திரை எடுப்பதற்கான தடயங்கள் இருக்கின்றன, நிறுத்தி விட்டால் குழந்தை தானாக பிறக்கும்" என்றார்.

அவ்வளவுதான் என் மனைவி கோர தாண்டவம் ஆடினாள். "இது என் தனிப்பட்ட விடயம் என்னுடைய உத்தரவில்லாது எப்பிடி அவருக்கு சொல்வீர்கள்? இது ஆஸ்திரேலியா, நான் உங்கள் மீது வழக்கு தொடர்வேன்! இது மனித உரிமை மீறல், இடம்பெயர்ந்து குடியேறிய பெண்ணுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி, ஐயகோ! இதை கேட்பார் இல்லையா?" என கண்றீனும் மாடுபோல் கதறி நின்றாள்.

வைத்திய நிபுணர் சிறிதும் கலங்காமல் "குழந்தை பெறுவதென்பது ஒரு பெண்ணின் தனிப்பட்ட விடயமில்லை,  கணவன் மனைவிக்கிடையிலான உடன்படிக்கை, அதற்கு மேலாக ஆஸ்திரேலியா தனிப்பட்டதும், இரகசியமானதுமான உங்கள்  தகவல்களை சம்பந்தப்படடவர்களுக்கு தேவையான அளவுக்கு தெரிவிக்கலாம் என்ற சட்ட பத்திரத்தில் சுயநினைவுடன் கையெழுத்து இட்டுள்ளீர்கள். நீங்கள் எனக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதானால் தாராளமாக எடுக்கலாம், நான் உங்களை நீதி மன்றத்தில் சந்திக்க தயார்" என்கிறார்.

பின்பு என்னை தனியாக அழைத்து "உங்கள் மனைவியை ஒரு மனோதத்துவ வைத்தியருடன் கலந்து ஆலோசிப்பது நன்மை உண்டாக்கும்" என்றார். நான் மனஅழுத்தம் கொண்ட நோயாளி போல் சுயநினைவில்லாமல் வீட்டுக்கு வந்து சேர்ந்தேன், என் அழகிய உருவமும், அழுகிய மனமும் கொண்ட மனைவியுடன். குற்ற உணர்வில் கூனி குறுகி நின்றாள் என் மனம் கவர் அழுகிய தேவி.
என் மனம் "அம்மா! அம்மா!" என அழ ஆரம்பித்தது.

நாலு நாட்களாக மவுனப்போராட்டம். நாங்கள் பேசிக்கொள்ளவில்லை, ஒரே கட்டிலில் ஆனால் கட்டில் நுனிகளில் சுவரை பார்த்தபடி உறங்கினோம். அவள் சமைத்த சாப்பாட்டை நான் சாப்பிடவில்லை. கடை சாப்பாட்டுடன் சமாளித்தேன். ஐந்தாம் நாள் காலமை, அது ஒரு சனிக்கிழமை காலை. நான் தேநீர் பருகிய வண்ணம் தொலைக்காட்சியில் காலை செய்திகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அரை நிர்வாணமாக வந்து நின்றாள் அழகர் குடி அழகிய அசமுகி. "நான் நாலு நாட்களாக கருத்தடை மாத்திரை எடுக்கவில்லை, வாங்கோ பிள்ளை பெறுவம்" என்றாள் அசிங்கமாக. என்னை நிர்வாணமாக்கி நடு தெருவில் கட்டி வைத்ததுபோல் இருந்தது. அவள் முகத்தை பார்த்தால் நாய் நக்கின பீவாளி போல இருந்தது. "என்னது நீ ஒரு சினை மாடு, நான் மாட்டிலை விடுற காளை மாடு, உனக்கு சினை சூடு வரும், நான் அவுத்து போட்டிட்டு அப்பிடியே உனக்கு சினை தரவேணும், போடி அங்காலை  வெட்கம் கெட்டவளே, என்னை தொடாதே " என தள்ளி விட்டேன்.

தூரவாய் அறை கம்பளத்தில் விழுந்தவள், ஒருக்களித்து இருந்து சிலுக்கு சுமிதா மாதிரி கவர்ச்சி படம் காட்டி  "வர வர கொஞ்சம் வெறுப்பாய்த்தான் இருக்கு" எண்டவள், நான் இருந்த கைப்பிடியில் அமர்ந்து என் முகத்தருகே வந்து "நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே" என்ற பாட்டை அபசுரமாக பாட ஆரம்பித்தாள். "தள்ளிப்போடி , வாயை திறந்தால் யாழ்பாணத்து கக்கூசு கான் கிண்டின மணம் அடிக்குது" எண்டு சொல்லி முகத்தை திருப்பிக்கொண்டேன்.

கொஞ்சம் உறைச்சிருக்க வேணும், தன் சுயநினைவுக்கு வந்தாள். பழைய படி முருக்க மரம் ஏறினாள். "ஏதோ உம்மிலை புனுகு , ஜவ்வாது வாசம் வார மாதிரி, கிட்ட வந்தால் கருத்தக்கிடாய் மூத்திர மணம், நினைப்புத்தான் பிழைப்பை கெடுத்துதாம்"எண்டாள். நான் பயந்து போனேன், உண்மையாய் நான் நாத்தம் அடிக்கிறேனோ, கக்கத்துள் மணந்து பார்த்தேன். காலை குளித்தபின் பூசிய வாசனை திரவியம் மணந்தது.

அவள் ஏளனமாக சிரித்தாள், "உங்களுக்கு உங்களிலையே நம்பிக்கையில்லை, அதிலை காணாதெண்டு ஆம்பிளை எண்டு காட்ட தடிப்பமா ஒரு மீசை வேறை, தூ!" எண்டாள். மனம் அனலாக கொதித்து, எரிமலையாக கொதித்து, தீ பிழம்பாக தகித்தது. நான் அந்த தகிப்பில் எரிந்து சாம்பல் ஆகி விடுவேனோ என பயமாக இருந்தது. ஏதாவது உறைக்கிற மாதிரி சொல்லவேணுமே.

"நீ ஒரு தரித்திரம், உன்ரை மேனி மினுக்க மாத்திரம் ஒரு ஆள் உழைக்கவேணும் " என்றேன் , "நீர் ஒரு பணத்தாசை பிடிச்ச பூதம் கஞ்சப்பிசினாரி" என்றாள். "மந்திக்குரங்கே" என்றேன் "மதவடியில் தேவாங்கே" என்றாள்" வார்த்தைகள் தடித்தன.

"வேசை வாயாலை வெட்டுவாளாம் வெட்டெருமை கொம்பாலை வெட்டுமாம் " என்றேன். "என்ன என்னை வேசி என்றா சொன்னாய் அப்படியென்றால் நீ வேசிமகன்" என்றாள். "நீ ஏன் என் அம்மாவை இழுக்கிறாய் நான் உன் அம்மாவைபற்றி ஒண்டும் சொல்லவில்லையே" என்றேன். வேசிக்கு என்ன ஆண்பால், வேசன்! ம்ஹ்ம் அப்பிடி ஒரு தமிழ் சொல்லே இல்லை. சிறிது தளம்பினேன் .

"ஏண்டி தேவடியாளே! வேணும் எண்டால் என்னை காமுகன் எண்டோ அல்லது பெம்பிளை பொறுக்கி எண்டோ சொல்லு ஆனால் என் அம்மாவை இழுத்தியெண்டால் எனக்கு படு கோவம் வரும் " என்றேன். "ஆம்பிளையளுக்கு அவையின்ரை அம்மாமாரை  இழுத்தால்தான் உறைக்கும், தேவடியா மகனே" என்றாள். நான் ஆத்திரத்தில் என்னை இழந்தேன். அடிப்பதற்கு கையை உயர்த்தினேன். "எங்கை  அடி பாப்பம்" என இடுப்பில் கை வைத்து நின்றாள். "தொலை பேசியில் பூச்சிய பொத்தானை மூண்டு தரம் அமுக்கினால் நகர் பாதுகாவலர் உம்மை கைது செய்ய வருவார்கள்" என்றாள்.

"அப்பிடியா வெளியே போடி " என்றேன், "நான் ஏன் போகவேணும், இது ஒண்டும் இலங்கை இல்லை, இது ஆஸ்திரேலியா இந்த வீட்டில் எனக்கும் அரை பங்கு உண்டு என்றாள்". இனி இவளுடன் வாழ்வது சரிப்படாது, என்னுடைய உடமைகளை ஒரு பெட்டியில் அடுக்கினேன், நல்லகாலம் நான் கட்டிய தாலியை வேலைக்கு போவதால் கழட்டி வைத்திருந்தாள். எடுத்துக்கொண்டேன், கல்யாண மோதிரம், கார் சாவிகளை மேசையில் விட்டெறிந்தேன்.

என்னுடைய வீட்டை விட்டு திருமண அகதியாக வெளியேறினேன். நான் இலங்கையில் இருந்து அகதியாக வரவில்லை ஆனால் ஆஸ்திரேலியாவில் அகதியானேன்.

வெகு தொலைவில் யாரோ சிவரஞ்சனி இராகத்தில் யாழ் இசைத்தார்கள் 































கருத்துகள் இல்லை: