என் மனைவியை துலைத்துவிட்டேன்


என் மனைவியை துலைத்துவிட்டேன் 

இன்று காலையில் இருந்து என் மனைவியை காணவில்லை,
எல்லா இடமும் தேடிவிட்டேன், பலதடவை கூப்பிட்டும் காணவில்லை.

எங்கு போவதாயினும் ஒன்றுக்கு மூண்டு தடவை சொல்லிவிட்டுத்தான்  போவாள்.
பாண், பால் ஏதும் முடிஞ்சு போச்சோ, குளிர்சாதன பெட்டியை திறந்து பார்த்தேன் .
ம்ஹ்ம்! தேவையான அளவு இருந்தது!

மேசையில் என்னுடைய குவளையில் , சூடாக தேநீர் இருந்தது,
அப்பிடி என்றால் இப்பதான் போயிருக்க வேணும்.

வெளியே அவளுடைய மோட்டார் வாகனம் அப்படியே  நிக்கிறது 
படுக்கை அறையில் வீட்டு உடுப்புகள் மாற்றிய அடையாளமே இல்லை.
ம்ம், எங்குதான் போயிருப்பாள்!

தேநீர் அருந்தி, காலை கடன்களை முடித்து, குளித்து சாமி கும்பிட்டு வெளியே வந்தேன்,
சூடாக சீஸ் டோஸ்ட் உடன் பால் கோப்பி இருந்தது .

சனிக்கிழமை காலமை நான் முட்டை பொரியலும் பாணும்தான் சாப்பிடுவேன்,
அவளுக்கு அது நன்றாக தெரியும்,
ம்ம்! அப்படியாயின் இது செய்தது யார்!

பலதடவை மீண்டும் அவளை கூப்பிட்டு பார்த்தேன், பதிலே இல்லை.
மனம் சஞ்சலப்பட ஆரம்பித்தது.

மூத்தவனை கேட்கவோ? அது சரிப்படாது. முதலும் கடைசியும் பெடியன்கள்.
அம்மா, எண்டால் பெடியங்களுக்கு உயிர். தாயை காணவில்லை என அறிந்தால்!
ம்ஹ்ம்! நான்தான் என்னவோ செய்து விட்டேன் என என்னை வறுத்து எடுத்து போடுவாங்கள்.

நடுவான் பெட்டை. அப்பா! அப்பா! என்று என்னில் நல்ல வாரப்பாடு.
அவளை எப்பிடி கேக்க, கலியாணமாகி அடுத்த மாநிலத்தில் நிறை மாதமாக இருக்கிறாள்.

யாரை கேட்க? நண்பர்கள், உறவினர்களை கேட்டால் அதோகதிதான்.
மணியின் மனைவி யாரோடையோ ஓடிப்போய் விட்டாளாம் என கதை கட்டி விடுவார்கள்.
ம்ஹ்ம்! உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூடேலாது.

நேரம் மெதுவாக நகர்கின்றது, நேரம் போக்காட்ட முன்னுள்ள ரோசா செடிகளுக்கு தண்ணி விட்டபடி , தெருவை தெருவை பார்கிறேன், அவளின் நிழலை கூட காணவில்லை.

வெழியே வந்த முன் வீட்டு சூசன் நான் எதையாவது தொலைத்துவிட்டேனா எண்டு கேட்டாள் ,
தெருவை, தெருவை பார்த்தபடியால் அப்பிடி நினைச்சாளோ,
ம்ஹ்ம்! இல்லையே என் மழுப்பினேன்.

மனதில் பயம் பிடிக்க, களைச்சுபோய் உள்ளே வந்தேன்.
தொலை காட்சி பெட்டியை முடுக்கினேன், மனம் அதில் இலயிக்கவில்லை.

யாரோடையாவது ஓடிபோயிட்டாளோ, ஆஸ்திரேலியா நாகரீகம் பிடிச்சிட்டுதோ,
நேற்றிரவு கூட சிலுமிசம் பண்ணி என்னை இருவது வயது வாலிபனாக மாறியவள்,
ம்ஹ்ம்! பெண் மனதின் ஆழம் அறியமுடியாது என அம்மையா அடிக்கடி சொல்லுவார் 

மெதுவாக பசித்தது, சாப்பாட்டு மேசையில் மரக்கறி சாப்பாடு சுட சுட! இருந்தது,
யார்  இது சமைத்தது? இவளென்ன இராவணன் பரம்பரையோ? மாயாஜாலம் காட்டுறாளே.

சனிக்கிழமை மதியம் எனக்கு ஆட்டிறைச்சி  குழம்பு, ஆட்டெலும்பு சொதி, கத்தரிக்காய் வெள்ளைக்கறியோடை, ஒரு இலைச்சுண்டல் வேணும். அவளுக்கு நல்லா தெரியும்.
ம்ஹ்ம்! அவளின் கைப்பக்குவம் இருந்தாலும், அவள் இதை சமைக்கவில்லை.

சாட்டுக்கு சாப்பிடுவிட்டு படுக்கையில் சாய்கிறேன். மனம் அங்கலாய்கிறது!
பழைய நினைவுகள் படம் போல் ஓடுகிறது.

என் மனைவி, என் தாய் மாமன் மகள், என்ரை முறை மச்சாள்.
என்ரை பெயரை சொல்லி சொல்லியே வளர்ந்து ஆளானவள்.
ம்ஹ்ம்! விடப்படாது, எப்பிடியாவது கண்டு பிடிக்க வேணும்.

அவள் படிப்பில் வலும்  கெட்டிக்காரி. நான் பன்னிரண்டாம் வகுப்போடை, சர்வகலாசாலை போக புள்ளிகள் காணாமல், ஒரு தனியார் வங்கியில் காசாளராக சேர்ந்தேன்.

அவள் சர்வகலாசாலையில் பயின்ற பௌதீக துறை பட்டதாரி. அவள் பட்டமெடுத்து வெளி வரும்போது, நான் பதவி உயர்வுகள் பெற்று வங்கியின் ஒரு கிளைக்கு பொறுப்பதிகாரி!
ம்ம்! கை நிறைய சம்பளம்.

அவளின் படிப்பு முடிந்ததும், என் முறுக்கு மீசை தாய் மாமன் , அவள் படித்த படிப்புக்கு 
வைத்தியர் அல்லது பொறியியலாளர் மாப்பிள்ளை தான் சரி என, மாப்பிள்ளை தேடினார்.

என் மனைவியோ, கட்டினால் அத்தானைத்தான் கட்டுவன், அல்லது கன்னியாக இருப்பேன் எண்டாள் , என் மாமனும் ஒரு சதம் சீதனம் தரமாட்டன் எண்டார்.
ம்ஹ்ம்! அதெல்லாம் முடியாது, என் பங்கை தாருங்கள் என வாங்கி வந்தவள்.

மணி அஞ்சரை ஆகிவிட்டது, இவளை இன்னும் காணவில்லை.
இனி பொறுக்கேலாது மூத்தவனுக்கு தொலைபேசி போட வேண்டியதுதான்.
ம்ஹ்ம்! எப்பிடி ஆரம்பிக்க என தயங்கி ஆறு மணிக்கு தொலைபேசியை கையில் எடுத்தேன்.

"தேத்தண்ணி போடவே" என்று கேட்டபடி என் மனைவி பூசை அறையிலிருந்து வெளியே வந்தாள். "எங்கே போயிருந்தாய்? உன்னை முழு நாளும் தேடி களைத்து விட்டேன்" என்றேன்.

"நான் ஒரு இடமும் போகவில்லை, இங்குதான் இருந்தேன், சமைச்சு முடிய சாப்பிட வாங்கோ எண்டு கையால் சைகை காட்டினேனே" எண்டாள் என் அகமுடையாள்.
ம்ஹ்ம்! "சைகை காட்டினனியோ, வாய்க்குள்ளை என்ன கொழுக்கட்டையே " என்றேன்.

"மறந்து போய்ச்சே இண்டைக்கு என்ரை ஐயா செத்த திகதி, காலையிலிருந்து பின்னேரம் வரை நான் மவுன விரதம். நேற்று இரவு கூட சொன்னனே" என்றாள்.

"எட மறந்து போனனே" என மழுப்பிய நான் "எனக்கு இப்போது விளங்குகிறது, உன்னை ஏன் முழுநாளும் காண முடியவில்லை " என்றேன்.
ம்ஹ்ம்! "ஏதாவது குதர்க்கமாக சொல்லாதையுங்கோ" என்றாள் என் அடிசிற்கினியாள்.

"திருமணமாகி முப்பது வருஷமாச்சு. முதலிரவண்டு பேச ஆரம்பிச்ச நீ முப்பது வருசமா தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தாயல்லவா. நீ பேசாத ஒரு வினாடி என்று விரல் விட்டு எண்ணலாம்."

"அதனால் உன்னை என் காதுகளினால் மட்டும்  உணர ஆரம்பித்து விட்டேன். நீ மவுனமாக இருந்ததால், என்னால் உன்னை காண முடிய வில்லை" என்றேன்.
ம்ஹ்ம்! பெரிய பகிடி விடுறதா நினைப்பு" எண்டவள் தொலை பேசியை கையில் எடுத்தாள்.

"இங்கை பாருங்கோ பதினைஞ்சு தொலைபேசி அழைப்புகள், நீங்கள் ஒண்டையும் எடுக்கயில்லை. மூண்டு மூத்தவன், இரண்டு பெடிச்சி, ஐஞ்சு தரம் சின்னவன், எண்டு அடுக்கினாள்."

"உங்கடை அக்கா, ஐயோ! எண்டை அக்கா நாலு தரம், உங்கடை தங்கச்சி ஒரு தரம், என்ன பழக்கம் இது" எண்டவள் மூத்தவனின் தொலைபேசி இலக்கங்களை அமுக்கினாள்.
"ம்ஹ்ம்! உங்கடை கொப்பர் அடிக்கிற கூத்து இங்கை, பிள்ளை இல்லாத வீட்டிலை .....

அவ்வளவுதான் என் மனைவி முழு வீட்டையும் நீக்கமற நிறைத்து எங்கும் பிரசன்னமானாள் .













கருத்துகள் இல்லை: