வெகு தொலைவில் யாரோ சகானா இராகத்தில் யாழ் இசைத்தார்கள்

வெகு தொலைவில் யாரோ சகானா  இராகத்தில் யாழ் இசைத்தார்கள் 

அம்மா இறந்து கொள்ளிவைத்துவிட்டு கனத்த மனத்துடன் வீடு வந்தோம் 
வீட்டுக்குள் போக காலெடுத்த என்னை தடுத்தாள் என் மனைவி 

"கொள்ளிவைச்சவர் வீட்டுக்குள்ளை போகமுதல் மூண்டு செம்பு தண்ணி தலையில வாத்த பிறகுதான் உள்ளை போறது யாழ்ப்பாண சம்பிரதாயம், கொஞ்சம் பொறுங்கோ" என கூறி 
உள்ளே போனாள் என் மனைவி.

ஆஸ்திரேலியா ஆடி மாத குளிரில் நடுங்கியபடி வெளியே நின்றேன். சிறிது நேரத்தில் ஒரு வாளி தண்ணீரும் செம்புமாக, தன் புடவை கொய்யகத்தை நடுவில் பிடித்து இடுப்பில் செருகியபடி பிரசன்னமானாள் என் மனைவி. "முட்டுக்கால் போட்டு நில்லுங்கோ" என்றாள்.

முழந்தாளில் நின்ற நான் "ஐயய்யோ! குளிர் தண்ணியை தலையிலை வாக்கப்போறாளே" என பயந்து  பல்லை கடித்த படி, என் உடல் தசைகளை எல்லாம் இறுக்கிய படி, "குளிர் தண்ணியே இது " என்று நான் கேட்க முதலே எனக்கு மூச்சடைக்கும் என பயந்தோ என்னவோ, குழந்தைகளுக்கு முழுகவாக்கும்  போது நெற்றியில் கைவைத்து தண்ணி மூக்குக்கு போகாமல் நீர் வார்க்கும் தாய்போல் என்நெற்றியில் கை பிடிச்சு , ஒரு செம்பு நீரை என் தலையில்  வார்த்தாள். 

நக சூட்டில் பதமாக நீரை கலந்திருந்தாள். நான் உணர்ச்சி வசமாகி கண் கலங்கி போனேன். ஒரு தாய் போல் எவ்வளவு ஒரு கரிசனம். நான் அம்மாவை நினைத்து அழுவதாக நினைத்தவள் "அழாதையுங்கோ, என்ன சொன்னாலும் உங்கடை அம்மா, கஷ்டம் தான், ஆனால் இந்த மூண்டு செம்பு தண்ணி தலையிலை ஒரு தத்துவமே இருக்கு" எண்டாள்.

நெற்றியை சுருக்கி அவளை பார்த்தேன். "அதாவது எல்லா கவலைகளையும் இந்த இடத்தில் கழுவிவிட்டு, அம்மா நல்ல நிலைக்கு போயிட்டா எண்டு நம்பி உள்ளை வாங்கோ" எண்டாள். " உள்ளே வந்த என்னை "கெதியாக தலை குளிச்சு வாருங்கோ, அம்மாக்கு எள்ளும் தண்ணியும் இறைக்கவேணும், பிள்ளையளுக்கெல்லாம் பசி" எண்டவள் அரக்க பரக்க சமையல் அறைக்கு போனாள்.

நான் குளிச்சு முடிஞ்சு, தலையை அரை குறையாக துவட்டி வேட்டி கட்டி, அம்மா நினைவாக எங்கள் அறை  கட்டிலில் கண்ணீர் வழிய அமர்ந்திருந்தேன். "குளிச்சு முடிஞ்சுதே" என கேட்டபடி உள்ளே  வந்த என் மனைவி "ஐயோ என்ன கோலமிது தலை  முழுக்க ஈரம், இந்த குளிரிலை தடிமன் வரப்போகுது " எண்டவள் என் துவாயை எடுத்து என் தலையை தன் மார்புடன் அணைத்து, மெதுவாக என் தலை மயிரை கோதி துவட்டி விட்டாள்.

அம்மா என் சிறு வயசில் என் தலை மயிர் உணர்த்திய ஞாபகம் வர எனக்கு புல்லரித்து போய்விட்டது. என் மனைவியின் கைகளை இறுக பிடித்துக்கொண்டேன். " நீ யார், எனக்கு இரத்த சம்பந்தமே இல்லாத உனக்கு என்னில் ஏன் இவ்வளவு கரிசனம், நாங்கள் காதலித்துக்கூட  திருமணம் செய்யவில்லை. நீ என்னில் எவ்விதத்திலும் தங்கியில்லை, நீயும் உழைக்கிறாய். அழகாக  மோட்டார் வாகனம் ஓட்டுகிறாய், இப்படி இருக்க என்னை ஏன் உன் உள்ளம் கையில் வைத்து தாங்குகின்றாய். நீ யார் ?" என்றேன்.

என் மேலங்கி பொத்தான்களை பொருத்தியபடி என்னை ஒருக்களித்து பார்த்து, புன்னகையுடன் "நான் யாரா? இதென்ன கேள்வியிது, நான் உங்கள் தாரம், உங்கள் மனைவி" என்றாள். "அதுதான் தெரியுமே" என்றேன்.

"ஆனால் உங்களை கரிசனமாய் பார்த்து, நல் உணவூட்டி உங்களை பேணி பாதுகாத்து என் சேலை தலைப்பில் முடிந்து வைத்துக் கொள்ளும்போது நான் உங்கள் தாயாவேன்" என்றாள். "ம்ஹம் அப்படியானால் அம்மா இறக்கவில்லையா? என்றேன்.  "என்னதிது சிறு குழந்தைபோல, தாய் வயசாக இறந்துபோகலாம் ஆனால் தாய்மை இறப்பதில்லை என்பது  தெரியாதோ?" என்றாள்.

"அதுமட்டுமல்ல, நீங்கள் செய்கின்ற தவறுகளை எடுத்து சொல்லி புத்திமதி சொல்லி நல் வழிபடுத்தும்போது  போது நான் உங்கள் தந்தையாவேன்" என்றாள். "அது எப்படி ஒரு பெண் தந்தையாகமுடியும்?" என்றேன். "அதுதான் பெண்மையின் தனித்துவம்" என்றாள். "அதுக்கு மேலை, உங்கள் பலம், பலகீனம், அறிவு, அறியாமை எல்லாம் அறிந்தவள் நான். உங்கள் பலம், அறிவுகளை புகழ்பாடி, பலகீனம் அறியாமைகளை களையும் பொழுது நான் உங்கள்  ஆசான் ஆவேன்" என்றாள்.

"அடடே, என் அப்பன் நீ, என் அம்மை நீ , என் வாத்தியாரும் நீயா?" என்றேன். "எல்லாத்துக்கும் மேலாக உங்கள் தேவை அறிந்து, பகலில் சொன்னதெல்லாம் செய்து, இரவில் சொல்லாததெல்லாம் செய்து உங்களுக்கு உடம்பு சுகம் அளிக்கையில் நான் உங்கள் தாசி ஆவேன்" என்றாள் . சிறிது நாணிப்போன நான் "என்னதிது இப்பிடி பச்சைப்படி கொச்சையாக எல்லாத்தையும் பிட்டு பிட்டு வைக்கிறாய்" என்றேன்.  என் மூக்கு நுனியை பிடித்து ஆட்டியபடி "நான் முதன் முதலாக கண்டபொபொழுது நீங்கள் வெட்கப்பட்டு கன்னத்தில் குழி விழ சிரித்தீர்களே, அந்த சிரிப்பு இன்னும் மாறவில்லை, நானும் மறக்கவில்லை" என்றாள்.

"முப்பது வருசத்துக்கு முந்திய கதை, இன்னுமா உனக்கு அது ஞாபகம் இருக்கு? எனக்கு என்னவோ கனவுபோல் அல்லவா இருக்கு" என்றேன். "உங்களுக்கு அது கனவு, ஆனால் எனக்கு அது நிதர்சனம், அது சச்சிதானந்த நினைப்பு, நான் சாகும்வரை மறக்க மாட்டேன்" என்றாள்.

"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவது ஆம் நட்பு". உங்களுக்கு ஏதாவது  துன்பம் வந்து நீங்கள் தவிக்கையில் உங்களுக்கு ஆதாரக் கை கொடுத்து உங்களுடன் நான் ஒன்றாக நடக்கையில் நான் உங்கள் நண்பன் ஆவேன். 

"தம்பியுள்ளான் சண்டைக்கஞ்சான் என்பார்கள். உங்களுக்கு வேண்டாதவர் உங்களை வம்புக்கிழுத்தால் உங்கள்முன் கவசமாய் நின்று உங்களை காக்கும்போது, நான் உங்கள் சகோதரன் ஆவேன். தசரதனார் அசுரார்களுடன் போர்புரிகையில் அவர் தேர்சக்கர அச்சாணி உடைந்துவிட்டது. தேர் சரிந்தபொழுது நிலை தவறிய தசரதர் அசுரர்களின் அம்பினால் தாக்குண்டார். தேர் சாரதியாக அமர்ந்திருந்த அவரது இரண்டாவது மனைவி கைகேயி தேர் சக்கரத்தை திருத்தி சாதுரியமாக தேரை போர்க்களத்தில் இருந்து விலக்கி ஒட்டி, கணவனை காப்பாற்றினாள்." என்றாள்.

"ஐயையோ!!! என்னிடம் அயோத்தியாபுரி இரட்சியமும் இல்லை, உனக்கு நான் இரண்டு வரங்கள் தரப்போவதும் இல்லை " என்றேன். "நான் உங்கள் இரண்டாவது மனைவியும் இல்லை யாகத்தில் கிடைத்த அவிர்பாகத்தை உண்டு குழந்தைகள் பெறவும் இல்லை" என்றாள் நெடிலமாக.

"நீங்கள் உடம்பு நோக்கண்டு வருந்தும்போது, உங்களுடன் சேர்ந்து நானும் வருந்துகையில், ஐயோ! இந்த நோவை மாத்து சாமி , என கடவுளை வேண்டுகையில், ஒண்டும் செய்ய முடியவில்லையே என என் கையேலாத்தனத்தை நினைத்து மாய்கையில் நான் உங்கள் சகோதரியாவேன். ஒரு சகோதரிக்குத்தான் தன் ஆண் உடன்பிறப்பில் அவ்வளவு அன்பிருக்கும்" என்றாள்.

"யாவையும் ஆகி நின்றாய் தேவி" என்றேன்.

"நான் எல்லாம் ஆகி நின்றாலும் நான் உங்கள் பக்தை" என்றாள்.

" அந்த பக்தையின் தாசன் நான்" என்றேன்.

வெகு தொலைவில் யாரோ சகானா  இராகத்தில் யாழ் இசைத்தார்கள் 

















கருத்துகள் இல்லை: