என் மகளை தொலைத்து விட்டேன்

என் மகளை தொலைத்து விட்டேன் 


ஆம், என் மகளை தொலைத்துவிட்டேன் .
தொலைக்க போகிறேன், எண்டு தெரிந்து கொண்டே தொலைத்து விட்டேன்.

போன வருடம் சித்திரை மாசம், குளிர்ந்தும் குளிராத பிற்பகல்.
என் மகள் தன் காதலனை அழைத்து வருவதாக தொலைபேசியில் சொன்னாள்.

சொன்னபடியே ஒரு தடியனுடன், முகம் சிவக்க வந்தாள், எங்கள் திரு நிறைச்செல்வி.
"இவர்தான் என் உளம் கவர் கள்ளன், இவரைத்தான் கடி மணம் புரிவேன்" என்றாள்.

சிலகாலமாக கேள்விப்பட்ட விடயம்தான், எனவே அதிர்ச்சியாக இருக்கவில்லை.
"வாங்கோ! வாங்கோ!" என வரவேற்றோம் அந்த அந்நிய, தடியனை.

மட மடவென காரியங்கள்  நடந்தன, நாங்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு, தாம்பாள தட்டோடை போக 
தடியனின் குடும்பம், எங்கள்  வீட் டுக்கு வர, கலியாண திகதி முடிவாகியது.

இந்தியாவிலை சீலை வாங்கி, திருமண அழைப்பிதழ்  அடிச்சு, கலியாண மண்டபத்துக்கு அச்சரம்,
சமையல் காரருக்கு அச்சாரம், மேளகாரருக்கு அச்சாரம், என காசை தண்ணியாக இறைச்சோம்.

நேற்றுத்தான் தங்கமாக துலக்கிய தாம்பாளத்தில், மங்கள பொருள்களுடன், வெத்திலையில் 
தங்க  நாணயம் வைச்சு. மேள  வாத்தியங்கள் உச்சஸ்தாயில் வாசிக்க,

என் மனைவி மூன்று கரண்டிகள் நீர் விட, கண்நீர் மல்க, "கன்னியாம் கனக சம்பன்னாம்"
என மந்திரங்கள் முழங்க, தங்கமென வளர்த்தவளை தாரை வார்த்தோம் நானும் என் மனைவியும்.

இன்று வரவேற்பு, அதுவும் கடலில் மிதக்கும் ஒரு கப்பலில், ஆங்கிலேய அலங்கார மண்டபம்.
மது, மாமிசம் என காசை கரியாக்கி இருந்தனர், மாப்பிள்ளை வீட்டுக்காரர். 

முதலில் சிற்றுண்டி, பின்பு மது பானம், பின்பு இரு பக்கத்தினரின் பேச்சுப்போட்டி,
எங்கள் மகளைபற்றி, கட்டுரையாய் கவிதையாய், குரல் தழதழக்க வாசித்தேன்.

இரவு போசனத்தின் பின், எல்லோரும் நடனமாடி கொண்டிருந்தனர்.
மனம் சுமையாக கனத்தது, கப்பல் மேல் தளத்துக்கு சென்றேன், தனிமை சுகமாக இருந்தது.

என்னை தோளை அணைத்தது ஒரு கரம். எனக்கு அப்படி ஒரு அணைப்பு தேள்வைப்பட்டது.
திரும்பி பார்த்தேன், என் மகளை கவர்ந்த இராவணன் நின்றிருந்தான்.

"Uncle, you look bit stressed out and tired" என்றான் எனது மருமகன். 
"Yes, I need a good night sleep" என்றேன் நான். "Only an hour left uncle" என்றவன்.

"Shall I get you some whisky?" என ஆதரவுடன் கேட்டான் என் மகளின் பிரியன்.
" Yes that would do" என்றேன் கொட்டாவி விட்டபடி.

"How do you want it, on the rocks"? என பணிவாக கேட்டான்.
"Yes please" என்கிறேன் ஆதங்கத்துடன். "Give me a sec." என்றவன் விரைந்தான்.

கீழே பார்க்கிறேன், என்னுடைய பெடியங்கள் அவரவர் வெள்ளைத்தோல் காதலிகளுடன்,
குரங்குகள் போல் உடம்பை ஆட்டி நடனம் ஆடி கொண்டிருந்தனர்.

என் மனைவி சம்பந்தி பக்க ஆக்களுடன், கனகாலம் தெரிஞ்சவை மாதிரி,
வம்பளந்து கொண்டிருந்தாள்.

விரைந்து வந்தான் என் மருமகன். கண்ணாடி  குவளையில் பனிக்கட்டி மிதக்க whisky உடன்.
கையில் என்குவளையை தந்தவன் , தன்  குவளையை என் குவளையில் தட்டி "Cheers " என்றான்.

"Cheers uncle!" என்றவனுக்கு "Cheers, thank you son" என்றேன். 
தந்த whiskyயை உறுஞ்சினேன், கப்பல் ஆட்டத்துக்கு மெதுவாக விழப்போனேன்.

என்னை தாங்கி பிடித்தவன் "Take care uncle, don't worry I will take care of your daughter" என்றான். அவனை அணைத்து "Thank you, son" என்றேன்.

இரண்டு தடவைகள் "Thank you son" என்று சொல்லி விட்டேன்.  "நன்றி மகனே" என இரண்டு தடவைகள் சொல்லிவிட்டேன். என்னில் ஏன் இந்த மாற்றம்?

ஆம், என் மகளை தாரை வார்த்து கொடுத்தாலும், இன்னுமொரு மகன் கிடைத்திருக்கிறான்.
நன்றி கடவுளே. நான் தண்ணியன் ஆனேன்.




















கருத்துகள் இல்லை: